வெடிகுண்டு வீசியும் சரமாரி வெட்டியும் பிரபல ரவுடி படுகொலை: புதுச்சேரியில் பயங்கரம்
6/7/2020 3:00:02 PM
காலாப்பட்டு: புதுவை பூமியான்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் கொட்டா ரமேஷ் (50). பிரபல ரவுடியான ரமேஷ் மீது ரெட்டியார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இன்று காலை 6.20 மணி அளவில் வாக்கிங் செல்வதற்காக பைக்கில் வானூர் தாலுகா சின்னக்கோட்டக்குப்பம் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் 2 பைக்கில் வந்த 4 மர்ம நபர்கள் இவரை விரட்டி வந்தனர். இதனால் அங்குள்ள பைரவர் கோயில் முன்பு பைக்கை போட்டு விட்டு ரமேஷ் தப்பினார். ஆனால் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் தாங்கள் வைத்திருந்த வெடிகுண்டை வீசியும் அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொன்றனர்.
இதுபற்றி அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ரவுடி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி இந்திராகாந்தி சிலை அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொட்டா ரமேஷூக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதற்கு பழிக்குப்பழியாக இவர் கொலை செய்யப்பட்டாரா? வேறு காரணமா? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.