வேளச்சேரி அருகே கால்டாக்சி டிரைவர் வெட்டி கொலை: ஒருவர் கைது
6/7/2020 2:27:24 PM
வேளச்சேரி: வேளச்சேரி அருகே நேற்றிரவு ஒரு கால்டாக்சி டிரைவர் பலத்த வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒருவரை கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னை வேளச்சேரி அருகே மேடவாக்கம் கூட் ரோடு, வேளச்சேரி பிரதான சாலையை ஒட்டியுள்ள ஒரு காலி மைதானத்தில் நேற்றிரவு ஒரு வாலிபர் பலத்த வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வாலிபரின் சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் போலீசாரின் விசாரணையில், அந்த வாலிபர் செம்பாக்கம். காமராஜபுரம், ராஜகீழ்ப்பாக்கம் டெல்லஸ் அவென்யூவை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் சாம்குமார் (33) எனத் தெரியவந்தது.
இப்புகாரின்பேரில் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், நேற்றிரவு கால்டாக்சி டிரைவர் சாம்குமார் மேடவாக்கம் கூட் ரோட்டுக்கு வந்தபோது, அங்கு நின்றிருந்த மேடவாக்கத்தை சேர்ந்த ராகேஷ் மற்றும் நண்பர்களான அஜித், திடீர் மணி ஆகிய 3 பேருடன் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இம்மோதலில் 3 பேரும் டிரைவர் சாம்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இதையடுத்து மேடவாக்கத்தை சேர்ந்த ராகேஷ் என்பவரை கைது செய்து, டிரைவர் சாம்குமார் கொலைக்கான காரணம், அவருடன் யார், யார் உடனிருந்தனர் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தினால் அங்கு பரபரப்பு நிலவியது.