ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து அனகாபுத்தூரில் கஞ்சா விற்பனை; 4 பேர் கைது
6/6/2020 3:08:10 PM
பல்லாவரம்: ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து அனகாபுத்தூரில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில் கஞ்சா விற்கப்படுவதாக சங்கர்நகர் போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தன. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் முகமது பரக்கதுல்லா தலைமையில் தனிப்படை போலீசார், அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். இந்நிலையில், நேற்று மாலை, அனகாபுத்தூர் சுடுகாட்டு பகுதியில் ஒரு மர்ம கும்பல் கஞ்சா விற்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 4 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர்.
அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சிவா (எ) சிவகுமார் (29), சாதிக் பாட்சா (20), கோபிசங்கர் (20), அஜய் (19) என தெரிந்தது. இவர்கள், ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சா கடத்தி வந்து, சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்ததாக ஒப்பு கொண்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.