ஆவடி அருகே மீன் வியாபாரி கொடூர கொலையில் 3 பேர் கைது: பிரபல ரவுடிக்கு வலை
6/6/2020 3:06:29 PM
ஆவடி: ஆவடி அருகே மீன் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இருவரை வலைவீசி தேடி வருகின்றனர். ஆவடி அருகே அயப்பாக்கம், அன்னை அஞ்சுகம் நகர், பாட்டாளி குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (32). மீன் வியாபாரி. நேற்று காலையில் வீட்டில் இருந்த பாண்டியனை, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பாண்டியன் வெளியே அழைத்து சென்றார். பின்னர், அதே பகுதியில் பாண்டியனை 5 பேர் கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், கொலையான பாண்டியனின் மைத்துனர் சக்திவேலின் பைக்கை, அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (24) என்பவர் குடிபோதையில் காலால் உதைத்து சேதப்படுத்தியுள்ளார்.
இதனால் கார்த்திக்கை, பாண்டியனும், சக்திவேலும் தட்டி கேட்டுள்ளனர். அப்போது கார்த்திக்குக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பன்னீர் (35) என்பவர், சக்திவேலுக்கு போன் செய்து மிரட்டியுள்ளார். இதனால் முன்விரோதம் ஏற்பட்டது. அதற்கு பிறகுதான், நேற்று பாண்டியனை ரவுடி பன்னீர், கார்த்திக், பிரசாத்குமார், சிவலிங்கம், மற்றொரு பாண்டியன் ஆகிய 5 பேரும் அரிவாளால் வெட்டி கொன்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து, 5 பேரை வலைவீசி தேடி வந்தனர். அவர்களில் 3 பேரை இன்று காலை கைது செய்தனர். அவர்கள், பெரம்பூர், ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த சிவலிங்கம் (28), அயப்பாக்கம், அஞ்சுகம் நகரை சேர்ந்த பிரசாத்குமார் (26), அவரது தம்பி கார்த்திக் (24) ஆவர். அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ரவுடி பன்னீர், பாண்டியன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.