விருத்தாசலம் அருகே ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த ஐம்பொன் சிலை கிடைத்தது
11/13/2019 3:30:22 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பள்ளம் தோண்டும்போது ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த ஐம்பொன் சிலை கிடைத்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ஆலடி அருகே உள்ள பழையப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்ஜலீல்(70). இவருக்கு அப்பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் முந்திரி தோப்பு உள்ளது. தனது நிலத்தில் தேசிய வேளாண்மை திட்டத்தின் மூலம் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு அணை கட்டும் பணியை செய்து வந்தார். இதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் சுமார் 3 அடி ஆழம் மண்ணைத் தோண்டி அதன் மூலம் வாய்க்கால் கரை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது பொக்லைன் இயந்திரத்தில் சிக்கி சாமி சிலை ஒன்றும் அதனோடு பூஜை செய்வதற்கான சாமான்களும் இருந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆலடி போலீசார், விருத்தாசலம் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் முன்னிலையில் பூமிக்கடியில் இருந்த பொருட்கள் அனைத்தையும் தோண்டி எடுத்து அவைகளை விருத்தாசலம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தாசில்தார் கவியரசு முன்னிலையில் நகை மதிப்பீட்டாளர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் சிலை மற்றும் கிடைத்த அந்த பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் சுமார் 23 கிலோ ஐம்பொன்னாலான நர்த்தன கிருஷ்ணர் சிலை எனவும், மற்றவை பித்தளை மற்றும் செம்பு ஆகிய உலோகங்களால் ஆன சுமார் 25 கிலோ எடை கொண்ட 17 பூஜை சாமான்கள் எனவும், இவைகள் அனைத்தும் சுமார் 700 ஆண்டு முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை பழங்கால ஐம்பொன் சிலை எனவும், இதன் மதிப்பை தற்போது கணிக்க இயலாது எனவும் தாசில்தார் கவியரசு தெரிவித்தார். இதையடுத்து சிலை மற்றும் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து அதனடிப்படையில் அவைகளை அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்படும் எனவும் கூறினார். இதுகுறித்து ஆலடி போலீசார் மற்றும் விருத்தாசலம் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.