விளைநிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க தூத்துக்குடியில் பொதுமக்கள் எதிர்ப்பு: லாரியை சிறைப்பிடித்து மறியல்
11/13/2019 3:26:51 PM
ஸ்பிக்நகர்: விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் நிறைவடைந்து தற்போது தூத்துக்குடி ஒன்றியம் வைகுண்டம் வடகால் பாசனத்திற்கு உட்பட்ட குலையன்கரிசல், பொட்டல்காடு கிராமங்களில் விளைநிலங்கள் வழியாக குழாய் பதிக்க முற்பட்டனர். இதனை கண்டித்து கிராம மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பலமுறை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஜூலை 17ல் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் விவசாய சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் சமாதானப் பேச்சுவார்த்தை தூத்துக்குடி தாசில்தார் ஜான் ஜெபராஜ் தலைமையில் நடந்தது. இதில் வைகுண்டம் வடகால் பாசன நிலங்கள் வழியாகக் கொண்டு செல்லாமல் மாற்றுப்பாதையில் 48 கண்மாய் கரையோரமாக, உப்பாற்று ஓடை வழியாக எரிவாயு குழாய் பதிக்க வேண்டும்,கிராமத்தின் அருகே எரிவாயு குழாய் கொண்டு செல்லக்கூடாது என்று பொதுமக்கள், விவசாய சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதிகாரிகள் பரிசீலிப்பதாக கூறிச்சென்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென குழாய் பதிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி கைவிடப்பட்டது. குழாயை இறக்க விடாமல் வாகனங்களையும் திருப்பி அனுப்பினர். பொட்டல்காடு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அதில், ‘’பொட்டல்காட்டில் அரசு பள்ளி, குடியிருப்பு, கல்லூரிகள் அருகிலும் ஊர் மத்தியிலும், விளைநிலத்திலும், எரிவாயு குழாய்கள் அமைக்க உள்ளனர். இதற்காக அப்பகுதியில் உந்துதல் நிலையமும் அமைக்கப்பட உள்ளது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதால் மாற்றுப்பாதையில் பணிகளை நிறைவேற்றவேண்டும்’’ கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் நேற்று திடீரென எரிவாயு குழாய் அமைக்கும் பணிக்காக லாரிகளில் குழாய்கள் கொண்டு வரப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் கிராமமக்கள் சென்று குழாய்கள் ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். முத்தையாபுரம் போலீசார் வந்து கிராமமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குழாய் ஏற்றிவந்த லாரி முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.