செங்கல்பட்டு புதிய மாவட்டம் உதயம்: தமிழக அரசு முடிவு
7/18/2019 3:32:36 PM
சென்னை: காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல, திருநெல்வேலியை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமும் உருவாக்கப்படுகிறது. தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட 32 மாவட்டங்கள் உள்ளன. தமிழக அரசு கடந்த சில மாதங்களாக புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளை உருவாக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேலும் 2 மாவட்டங்களை உருவாக்க முடிவு செய்தது. இந்த இரு மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பல ஆண்டுகேளாக கோரிக்கைகள் எழுந்து வந்தன.
அதனால், திருநெல்வேலியை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முதல்வரின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. அதேபோல, காஞ்சிபுரத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுகிறது. இந்த இரு மாவட்ட பிரிப்பு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.