விழுப்புரம், தூத்துக்குடியில் கோர விபத்து: 16 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி
7/18/2019 3:31:42 PM
சென்னை: விழுப்புரம் மற்றும் தூத்துக்குடியில் நடந்த சாலை விபத்தில் குழந்தைகள் உள்பட 16 பேர் உடல் நசுங்கி இறந்தனர். கோவையில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு ஆம்னி பேருந்து 24 பயணிகளுடன் புறப்பட்டது. பேருந்தை டிரைவர் ராஜேந்திரன்(56) ஓட்டிச்சென்றார். மாற்று டிரைவராக ரவிச்சந்திரன்(38) என்பவரும் உடன் சென்றார். இதேபோல், செங்கல்பட்டு அருகே உத்திரமேரூர் பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டம் காங்கேயம் பகுதிக்கு மின்கம்பம் நடுவதற்காக ஒப்பந்ததாரர் தானேஸ்வரன் அழைப்பின் பேரில் விருதுநகர் பகுதியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம்(33), மதுரை பேரையூர் பகுதியை சேர்ந்த லிங்கம்(19), ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் முகேந்தர்முங்கையா(35), பெத்தானி(27) சுக்தவ்ரஜாக்(50) உள்பட 13 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மினி டெம்போ சென்றது. தங்கராஜ்(33) என்பவர் மினி டெம்போவை ஓட்டி சென்றார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் புறவழிசாலை பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2.45 மணியளவில் சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ் மீது தொழிலாளர்களை ஏற்றி சென்ற மினி டெம்போ நேருக்கு நேர் மோதியது. இதில் மினி டெம்போ நொறுங்கியது. இதுபோல் ஆம்னி பஸ் முன் பக்கம் சேதமடைந்தது. இடிபாடுகளில் சிக்கி டெம்போ டிரைவர் தங்கராஜ், ஆம்னி பஸ் டிரைவர் ராஜேந்திரன் மற்றும் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். 7 தொழிலாளர்கள் மற்றும் பஸ் மாற்று டிரைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் படுகாயமடைந்தனர். பஸ்சில் வந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்து கள்ளக்குறிச்சி போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 24 பயணிகளையும் மாற்று பேருந்து மூலமாக போலீசார் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பாண்டியன் நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் அருணாசலபாண்டி (35). இவரது மனைவி கவுசல்யா (22). இவர்களது 3 மாத கைக்குழந்தை அனிஸ்பாண்டி. இவர்கள் மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த உறவினர்கள் உள்ளிட்ட 15 பேர் நேற்றிரவு 10.30 மணியளவில் ஊரில் இருந்து திருச்செந்தூருக்கு வேனில் புறப்பட்டனர். வேனை முருகன் (45) என்பவர் ஓட்டி வந்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அதிகாலையில் விஸ்வரூப தரிசனம் நடைபெறும். இந்த தரிசனத்தில் கலந்து கொள்வதற்காக அருணாசலபாண்டி உள்ளிட்டோர் வேனில் வந்து கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அடுத்த கருங்குளம் அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வாய்க்கால் பாலத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதமாக வேன், தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு கீழே தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் நொறுங்கியது. வேனில் இருந்த சுகுமாறன் மகன் ஜெகதீஸ்வரன் (12), அருணாசலபாண்டி கைக்குழந்தை அனிஸ்பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். வேனில் இருந்தவர்களின் மரண ஓலம் கேட்டு அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களில் காசிராஜன் மனைவி பாக்கியலட்சுமி (46), ராமர் மனைவி முத்துலட்சுமி (65), கோபாலகிருஷ்ணன் மகன் நித்திஷ் (4), கருத்ததுரை மகன் அருணாசலபாண்டி (35) ஆகியோர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இவர்களையும் சேர்த்து பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் வேன் டிரைவர் முருகன் (45) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (28), இவரது மனைவி செண்பகலட்சுமி, மகள் சுவேதா (8), மகன் விஷ்ணு (11), கோபால் மனைவி சூர்யபிரபா, சுகுமாறன் மனைவி மாரிஸ்வரி, அருணாசலபாண்டி மனைவி கவுசல்யா (22), வைரம் மனைவி மல்லிகா (65), கோபாலகிருஷ்ணனின் 5 மாத கைக்குழந்தை முகிலன், செல்லையா மகன் சுகுமாறன் (48), இவரது மகன் முருகேசன் (15) ஆகிய 12 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டிரைவர் தூங்கியதே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக செய்துங்கநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.