ரூ5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கல்வி அதிகாரி கைது: உதவியாளரும் சிக்கினார்
7/17/2019 4:26:29 PM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள பங்குநத்தம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவரது மனைவி மீனா (40). இவர் சிக்கம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மருத்துவ விடுப்பு எடுத்திருந்தார். கடந்த மாதம் 17ம் தேதி மீண்டும் பணியில் சேர்ந்தார். அவருக்கு சம்பளம் ஏப்ரல், மே மாதம் நிலுவையில் இருந்தது. அந்த 2 மாத நிலுவைத்தொகையை வாங்க, தர்மபுரி வட்டார கல்வி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.
ரூ5ஆயிரம் பணம் கொடுத்தால் தான், இரண்டு மாத சம்பள நிலுவைத் தொகை வழங்க முடியும் என்று உதவியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ஆசிரியர் மீனா, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில், நேற்று உதவியாளர் குமரேசனிடம் ரூ5 ஆயிரத்தை ஆசிரியர் மீனா லஞ்சமாக கொடுத்தார். உதவியாளர் குமரேசன் ரூ2 ஆயிரம் எடுத்துக்கொண்டு, ரூ3 ஆயிரத்தை வட்டார கல்வி அலுவலர் மேரி சகாயராணியிடம் அளித்தார். அவர் வாங்கிய பணத்தை மேஜையின் மறைவில் வைத்திருந்தார்.
அப்போது மறைந்திருந்த, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி (பொறுப்பு) கிருஷ்ணராஜன் தலைமையிலான, லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றிவளைத்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். வட்டார கல்வி அலுவலர் மேரி சகாய ராணி ஓய்வு பெற இன்னும் 3 மாதங்கள் இருந்த நிலையில் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மேரி சகாய ராணி கிருஷ்ணகிரி சிறையிலும், உதவியாளர் குமரேசன் தர்மபுரி கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.