கெஜ்ரிவாலுடன் நல்ல உறவு: சொல்கிறார் டெல்லி கவர்னர்
7/11/2018 4:14:20 PM
புதுடெல்லி: டெல்லி மாநில அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, அதிகாரிகளை மாற்றுவது போன்ற விஷயங்களில் கவர்னர் அனில் பைஜாலுக்கும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றதால், ‘அதிகாரம் கவர்னருக்கு இல்லை, மாநில அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது’ என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனாலும் நீதிமன்ற தீர்ப்பில் சில விஷயங்களை கவர்னர் ஏற்க மறுத்து வருகிறார். இதுதொடர்பாக,
கெஜ்ரிவால் கவர்னருக்கு மீண்டும் கடிதம் எழுதினார்.
இந்நிலையில் கவர்னர் அனில் பைஜால், தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் ஆகியோர் நேற்று மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவை சந்தித்து
ஆலோசனை நடத்தினார்கள். அதிகாரிகளை இடமாற்றுவது தொடர்பான அதிகாரம் குறித்தே, அவர்களது ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால்,
ஆலோசனை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த கவர்னர், ‘‘எனக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையேயான உறவு நன்றாகவே உள்ளது’’ என்று கூறினார். இருந்தும்,
டெல்லி மாநில அரசு நிர்வாகத்தில், அதிகார போட்டி நிலவி வருவதால் அரசுப்பணிகள் சீராக நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.