சென்னையில் ரூ.20 கோடி நிலத்தை அபகரித்து மோசடி காசா கிராண்டி உரிமையாளர் அனிரூத் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை
4/5/2017 5:08:19 PM
சென்னை- சென்னையில் ரூ.20 கோடி நிலத்தை அபகரித்து மோசடி செய்ததாக காசா கிராண்டி உரிமையாளர் அனிரூத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னை செம்மஞ்சேரியை சேர்ந்தவர் குலசேகர். ரியல் எஸ்டேட் அதிபரான இவருக்கு பெருங்குடி திருவள்ளூர் சாலையில் ரூ.20 கோடி மத்திப்புள்ள நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்ய குலசேகர் முடிவு செய்தார். அதன்படி பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்டி நிறுவன உரிமையாளர் அனிரூத்(36) என்பவரை அணுகியுள்ளார். அதன்பின் இரண்டு பேரும் சேர்ந்து கட்டிடம் கட்டி விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளனர். பின்னர் அனிரூத், பெருங்குடி டவுன் பஞ்சாயத்தில் தனது பெயரில் அனுமதி ெபற்று கட்டிடம் கட்டியுள்ளார். ஒப்பந்தம்படி குலசேகருக்கு எந்த பங்கும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து குலசேகர் காசா கிராண்டி உரிமையாளர் அனிரூத்திடம் கேட்டுள்ளார். அப்போது இந்த இடம் எனது பெயரில் உள்ளது. நான் பெருங்குடி டவுன் பஞ்சாயத்தில் அனுமதி பெற்று கட்டி உள்ளேன். இதனால் உனக்கு பணம் கொடுக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த குலசேகர் பல முறை அனிரூத்திடம் நிலத்திற்கான பணம் ரூ.20 கோடியை கேட்டுள்ளார். அதற்கு உனக்கு பணம் கொடுக்க முடியாது மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்யக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து குலசேகர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில அபகரிப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குலசேகரின் ரூ.20 மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து காசா கிராண்டி கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அனிரூத் மீது ஐபிசி 465,468,471,420 கூட்டு சதி, மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இன்று காலையில் கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் அனிரூத்தை போலீசார் கைது செய்தனர். அவரை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.