Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2011
24
Apr
சம்மர் டூர் புத்துணர்ச்சி தரும் புதுச்சேரி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

அழகான கடற்கரை, நேர்த்தியான வீதிகள், கலைநயமிக்க பிரெஞ்ச்இந்திய பாணி கட்டிடங்கள், மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், ஆன்மீகத்தை அள்ளித்தரும் சித்தர் கோயில்கள், ஆரோவில்.. என பலவிதமான சுற்றுலா அனுபவங்கள் தரும் இடம் புதுச்சேரி.

கடற்கரை: புதுவை காந்திசிலை அமைந்துள்ள பீச் புரொமெனேட் பீச் என்று அழைக்கப்படுகிறது. கடற்கரைக்கு இணையாக வடக்கே பழைய சாராய வடிஆலை முதல் தெற்கே டூப்ளே சிலை வரை 1.5 கி.மீ. தூரமுள்ள சாலையில் வாகனங்களில் பயணித்துக்கொண்டே கடல் அழகை ரசிக்கலாம். இந்த சாலையில் கார்கில் நினைவுச்சின்னம், பழைய கலங்கரை விளக்கம், காந்திசிலை, போர் நினைவுச்சின்னம், பழைய சுங்கச்சாவடி, டூப்ளே சிலை ஆகியவை உள்ளன.

சுண்ணாம்பாறு படகு குழாம்: புதுவையில் இருந்து 8 கி.மீ. தெற்கே நோனாங்குப்பத்தில் உள்ள பாரடைஸ் கடற்கரை எழில்மிகுந்தது. இது சங்கமம் பீச் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு சுண்ணாம்பாறு நீர் விளையாட்டு மையம் உள்ளது. சுண்ணாம்பாறு கடலுடன் கலக்கும் இடம் என்பதால் இந்த பெயரில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள படகு குழாமில் இருந்து கடற்கரைக்கு படகு போக்குவரத்துக்கு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை படகு போக்குவரத்து உண்டு. தண்ணீரை கிழித்துக்கொண்டு பாயும் வாட்டர் ஸ்கூட்டர் இங்கு பிரபலம்.

அரவிந்தர் ஆசிரமம்: சுதந்திர போராட்ட வீரர் அரவிந்தர் புதுச்சேரிக்கு அடைக்கலம் தேடி 1910ல் வந்தார். தியான சக்தியை அனைவரும் உணரும் வகையில் ஆசிரமம் தொடங்கினார். 1914ம் ஆண்டு அரவிந்தரை சந்தித்த பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த மிரா அல்பாசா அவரது போதனைகளால் கவரப்பட்டார். அங்கேயே தங்கி ஆன்மீக கருத்துக்களை பரப்பிய இவர்தான் ஸ்ரீ அன்னை என்று அழைக்கப்படுகிறார். இங்கு அரவிந்தர், ஸ்ரீஅன்னை சமாதிகள் உள்ளன. காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆசிரமம் திறந்திருக்கும்.

ஆரோவில்: புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில்லில் 1968ல் ஸ்ரீஅன்னையால் தொடங்கப்பட்டது அமைதி நகரம், சர்வதேச நகரம் எனப்படும் ஆரோவில். தியானம் நடக்கும் திறந்தவெளி அரங்கு (ஆம்பி தியேட்டர்), ‘மாத்ரிமந்திர்’ தியானக்கூடம் பிரசித்தி பெற்றது.

ஆரோபீச்: புதுவை  சென்னை இடையே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆரோவில் கடற்கரை அழகு மிக்கது. பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் வெளிநாட்டவர்கள் சுதந்திரமாக சூரியக்குளியல் போடுவதை விரும்புகின்றனர். அலைகளின் வேகம் குறைவாக இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ ஏற்ற இடம்.

ஊசுட்டேரி: புதுவையின் மிகப்பெரிய ஏரி. திருக்கனூர் செல்லும் வழியில் உள்ளது. படகு சவாரியும் நடக்கிறது. பல்வேறு நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் இங்கு சீசனுக்கு வருவது சிறப்பு.
இதுதவிர, புதுவையில் ஒயிட் டவுன் பகுதியில் பிரெஞ்சு  இந்திய பாணியில் கட்டப்பட்ட கட்டிடங்கள், கலைநயம் மிக்க பிரெஞ்சு தூதரக கட்டிடம், ராஜ்நிவாஸ் (கவர்னர் மாளிகை), பாரதி பூங்கா, அருங்காட்சியகம், தாவரவியல் பூங்கா ஆகியவையும் சிறந்த சுற்றுலா தலங்கள். புதுவையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை நடைபெறும் சண்டே மார்க்கெட் விசேஷமானது.

அரிக்கமேடு: புதுவையை அடுத்துள்ள அரிக்கமேடு பகுதி நீண்ட வரலாறு கொண்டது. கி.பி. 2ம் நூற்றாண்டிலேயே இந்த பகுதியில் இருந்து ரோமானியாவுக்கு படகுகள் மூலம் வியாபாரம் நடந்துள்ளது. தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதியில் அந்தக்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகள், சிறிய செங்கற்களால் கட்டப்பட்ட சுற்றுச்சுவர்போன்றவை இன்றும் உள்ளன.

சித்தானந்தா கோயில்: மகாகவி பாரதியார் புதுவையில் தங்கியிருந்த இடங்கள் நினைவு சின்னங்களாக பராமரிக்கப்படுகிறது. கருவடிக்குப்பத்தில் உள்ள சித்தானந்தா கோயிலில் அமர்ந்துதான் பல பாடல்களை அவர் எழுதினார். அங்கு பாரதியாருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. புதுவையில் பல சித்தர்கள் வாழ்த்து ஏராளமான பாடல்களை இயற்றியுள்ளனர். 18 சித்தர்கள் இங்கு வாழ்ந்து ஜீவசமாதி அடைந்துள்ளனர். அவர்களுக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. குரு சித்தானந்தா, கம்பளிசாமி, அக்காசுவாமி மடம், கண்டமங்கலம் அருகே உள்ள படேசாகிப், ராம் பரதேசி சுவாமி மடம் போன்றவை பிரபலம்.

மணக்குள விநாயகர் கோயில், வேதபுரீஸ்வரர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில், வீராம்பட்டினம் செங்கழுநீர் மாரியம்மன் கோயில் போன்றவை பிரசித்தி பெற்றவை. 17 மற்றும் 18ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட பல கிறிஸ்தவ ஆலயங்கள் இங்குள்ளன. ரயில்நிலையம் எதிரே கலைநயத்துடன் கட்டப்பட்ட இருதய ஆண்டவர் ஆலயம், மிஷன்வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா ஆலயம் மற்றும் மீரான் மசூதி ஆகியவை புகழ்பெற்றவை.

திருவக்கரை காளி கோயில்: புதுவையில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் (விழுப்புரம் மாவட்டம்) உள்ள திருவக்கரையில் உள்ளது சந்திரமவுலீஸ்வரர் வக்கரகாளியம்மன் கோயில். இங்கு பவுர்ணமி பூஜை சிறப்பானது. இங்கு 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள கல்மரம் (பாசில்) உள்ளது. காளி கோயிலுக்கு ஒரு கிலோ மீட்டர் கிழக்கில் உள்ள ஜியாலஜிக்கல் பார்க் 247 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு 40 முதல் 50 மில்லியன் வருடங்கள் பழமையான கல்மரங்கள் உள்ளன.

புதுவை பிராந்தியத்தை சேர்ந்த காரைக்கால் 130 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கும் சுற்றுலா பயணிகளை கவரும் கடற்கரை, கடைவீதிகள் போன்ற பல அம்சங்கள் உள்ளன. காரைக்கால் அம்மையார் கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் மாங்கனி திருவிழா வெகு பிரசித்தம். மேலும் திருநள்ளாறில் உள்ள சனி பகவான் ஆலயம் மிகப்பெரிய ஆன்மீக தலமாக திகழ்கிறது. இங்குள்ள நள தீர்த்தத்தில் (நளன் குளம்) நீராடினால் நம்மை பிடித்த பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காரைக்கால் அருகே நாகூர், வேளாங்கண்ணி போன்ற ஆன்மீக தலங்கள் உள்ளன.

போக்குவரத்து வசதி: புதுவை சிறிய நகராக இருப்பதால் போக்குவரத்து வசதிக்கு குறைவில்லை. ஆட்டோ, வேன், கார், இருசக்கர வாகனம் என அனைத்தும் கிடைக்கும். வாடகைக்கு இருசக்கர வாகனம், சைக்கிள் கிடைப்பது சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வசதி. சென்னையில் இருந்து 160 கி.மீ. தூரத்தில் உள்ளது. அனைத்து ஊர்களில் இருந்தும் புதுச்சேரிக்கு பஸ் வசதி உள்ளது. விழுப்புரம், சென்னை, திருப்பதி, புவனேஸ்வரம், யஷ்வத்பூர், மங்களூர், ஹவுரா போன்ற இடங்களுக்கு ரயில் வசதி உள்ளது.

தங்கும் கட்டணம்: சாதாரண ஓட்டல்களில் ரூ.300 முதல் ரூ.1000 வரை வாடகையும் ஸ்டார் ஓட்டல்களில் ரூ.3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை வாடகை. புதுவையில் இருந்து சுற்றுப்புற பகுதிகளுக்கு செல்ல வாடகை கார்கள், வேன்கள் உள்ளன. ஆரோவில்லுக்கு ரூ.250 முதல் 300 வரை வசூலிக்கிறார்கள். தென்னிந்திய, வடஇந்திய, சைனீஸ், பிரெஞ்ச் என அனைத்து உணவு வகைகளும் கிடைக்கும்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement