களக்காட்டில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: விடியவிடிய தூங்காமல் மக்கள் தவிப்பு
களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பத்மநேரி, வடமலைசமுத்திரம், கோட்டை, கீழபத்தை, மேலபத்தை, சிதம்பரபுரம் பகுதிகளில் நேற்று மாலை 3.35 மணி மற்றும் 3.38 மணிக்கு அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. திடீரெனறு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் உருண்டோடின. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் 10-க்கும் அதிகமான வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டது. இருமுறை தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டதால் மீண்டும் நில அதிர்வு ஏற்படும் என்ற அச்சத்தால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் பீதியில் தவித்தனர். களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. தலையணை வனஊழியர் குடியிருப்பு பகுதியில் வீடுகள் குலுங்கின.