ஸ்கூல் பஸ் ஓட்டையில் விழுந்து இறந்த மாணவி ஸ்ருதிக்கு அஞ்சலி
தாம்பரம்: சேலையூர் சீயோன் பள்ளி மாணவி ஸ்ருதி பஸ் ஓட்டையில் விழுந்து இறந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர் விஜயன், பஸ் உரிமையாளர் யோகேஸ்வரன், டிரைவர் சீமான், கிளீனர் சண்முகம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த வாகனத்துக்கு தகுதி சான்று வழங்கிய, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் துறை ரீதியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். சீயோன் குழும பள்ளிகளில் வேன் மற்றும் பஸ் உள்பட மொத்தம் 38 வாகனங்கள் உள்ளன. விஜயனின் தம்பி பால்ராஜ் பள்ளி வாகனங்களை நிர்வகிக்கிறார்.
மற்றொரு தம்பி ரவி, மாடம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் பொறுப்பாளராக உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் பின்பக்கத்தில் உள்ள வீட்டில் இருந்த இருவரையும் நேற்று கைது செய்தனர். ஸ்ருதி இறந்த சம்பவத்தால் 26ம் தேதி முதல் சீயோன் குழுமத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இன்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது.
காலையில் பிரேயர் தொடங்கியதும் இறந்த மாணவியின் ஸ்ருதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, பேசிய பள்ளி முதல்வர் விஜயனின் மகனான ஆல்டாஸ், ‘நடக்க கூடாத ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து விட்டது. இதை மறந்து படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு படிப்புதான் முக்கியம். பள்ளி தொடர்ந்து இயங்கும்’ என்றார்.