தி.க.பிரமுகர் கொலை : தளி எம்எல்ஏ தி.மலை கோர்ட்டில் சரண்
திருவண்ணாமலை: பெரியார் தி.க.பிரமுகர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தளி எம்எல்ஏ உள்பட 5 பேர் திருவண்ணாமலை கோர்ட்டில் இன்று சரணடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் பழனிச்சாமி. கடந்த 5ம்தேதி உத்தனபள்ளியில் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரது தலையை துண்டித்து வீசினர். இதுதொடர்பாக தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்பட 22 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில், ஒசூர் தாலுகா கோபண்ணபல்லி கிராமத்தைச் சேர்ந்த பாபண்ணா (38), முகந்தபல்லி கிராமத்தைச் சேர்ந்த முரளி (28), தேன்கனிக்கோட்டை தாலுகா கொரட்டகிரி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணப்பா (29) சூளகிரி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (42) ஆகியோர் வேலூர் கோர்ட்டில் ஏற்கனவே சரணடைந்தனர். தலைமறைவாக உள்ள எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் திருவண்ணாமலை ஜே.எம்.முதலாவது கோர்ட்டில் தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன்(44), அவரது அண்ணன் வரதராஜ்(48), மாமனார் லகுமய்யா(64), உறவினர் கேசவமூர்த்தி(28), மற்றும் சித்தராஜ்(எ) ராஜா(28) ஆகியோர் சரணடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் கே.விஜயா உத்தரவிட்டார்.