வன்முறையை தூண்டும் வகையில் பேச கூடாது : அன்னா குழுவுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்
புதுடெல்லி: ஊழல் புகாரில் சிக்கியுள்ள 15 மத்திய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த புதன் கிழமை முதல் அன்னா குழுவினர் டெல்லி ஜந்தர்மந்தரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். வலுவான லோக்பால் வலியுறுத்தி நேற்று முதல் அன்னா குழுவினருடன் அன்னாஹசாரேவும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். இதற்கிடையில் பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தின் முன்பும், உள்துறை அமைச்சர் இல்லத்தின் முன்பும் அன்னா ஆதரவாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
அன்னா ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள், கரிதுண்டுகள், ரூபாய் நோட்டுகள் மற்றும் காசுகள் வீசப்பட்டன. ஜந்தர்மந்தர் உண்ணாவிரத மேடையில் பேசிய அன்னாகுழுவைச் சேர்ந்த விஸ்வாஸ், போலீசாரை கடுமையாக தாக்கி பேசினார்.
இந்நிலையில் அன்னா குழு ஒருங்கிணைப்பாளர் நீரஜ்க்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்கிய போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அன்னா குழுவினர் மீறக்கூடாது. வன்முறையை தூண்டும் வகையிலோ, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலோ பேசக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.