நெல்லூர் அருகே சென்னை ரயிலில் தீ : 35 பேர் பலி
நெல்லூர்: டெல்லியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 35 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். நெல்லூர் அருகே இன்று அதிகாலை நடந்த இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு ரயில்வே அதிகாரிகளும் மீட்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் இருந்து கடந்த சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. இந்த ரயில் திங்கள்கிழமை (இன்று) காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும்.
இந்நிலையில், இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் நெல்லூர் ரயில் நிலையத்துக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள ராம்நகர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அதிகாலை 4.45 மணி. பயணிகள் பெரும்பாலானோர் உறக்கத்தில் இருந்தனர்.
அப்போது எஸ்.11 முன்பதிவு பெட்டியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. உறக்கத்தில் இருந்த பயணிகள் வெப்பம் தாங்காமல் திடுக்கிட்டு எழுந்தனர். இந்த முன்பதிவு பெட்டியில் 72 பேர் பயணம் செய்தனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகள் சிலரும் இருந்தனர். பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். மற்ற பெட்டிகளில் இருந்தவர்கள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் எஸ்.11 பெட்டி பயங்கரமாக எரிய தொடங்கியது. பெட்டி கதவு அருகே தூங்கி கொண்டிருந்த பயணிகள் சிலர் ரயிலில் இருந்து கீழே குதித்தனர். இதில் 27க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 9 பேருக்கு கால் முறிந்தது. காயம் அடைந்தவர்கள் அனைவரும் நெல்லூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தீப்பற்றியது குறித்து ரயில் இன்ஜின் டிரைவர்கள் உடனடியாக நெல்லூர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 3 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயில் சிக்கி 35 பயணிகள் உடல் கருகி இறந்துவிட்டது தெரிந்தது. தீப்பற்றிய பெட்டியில் இருந்து அடையாளம் தெரியாத நிலையில் கருகி கிடந்த சடலங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் ஆழ்ந்த உறக்கத்திலேயே தீயில் கருகி உட்கார்ந்து, படுத்த நிலையிலேயே இறந்து கிடந்தனர்.
ரயிலில் எமர்ஜென்சி கதவு திறக்க முடியாததால், உள்ளே சிக்கி கொண்ட பயணிகளால் வெளியில் வர முடியவில்லை. இதனால்தான் சாவு எண்ணிக்கை அதிகமானது என்று தீயில் இருந்து தப்பிய பயணிகள் சிலர் கூறினர். முன்பதிவு பட்டியலின்படி டெல்லியில் இருந்து 13 பேரும், ஆக்ராவில் 3 பேரும், விஜயவாடா 28, வாரங்கல் 6, பாபட்லாவில் ஒரு பயணி உள்பட பலர் பயணம் செய்துள்ளது தெரிய வந்தது. காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களும் நெல்லூரில் இருந்து சென்னைக்கு செல்ல ஏறியவர்களும் இருக்கலாம் என கருதப்படுகிறது.
தகவலறிந்த நெல்லூர் கலெக்டர் ஸ்ரீதர், எஸ்பி ரமணக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். தீ விபத்து பற்றி தகவலறிந்த ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி இன்று காலை ஐதராபாத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லூருக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். தீ விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த விபத்து காரணமாக சென்னை - விஜயவாடா இடையிலான 10க்கும் அதிகமான ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தீ முற்றிலும் அணைக்கப்பட்ட பின் எஸ்.11 பெட்டி கழற்றி விடப்பட்டு காலை 6 மணியளவில் ரயில் சென்னை நோக்கி புறப்பட்டது. மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள பயணிகள் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
தீயில் இறந்தவர்களில் பலர் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த ரயிலில் வந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள் சென்னை சென்ட்ரலில் கண்ணீருடன் காத்திருக்கின்றனர். ரயிலில் தீப்பிடித்து நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 35 பேர் உடல் கருகி பலியானது ஆந்திரா மற்றும் தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உடைமைகளை எடுக்க சென்றவர்கள் பலியான பரிதாபம்
தீ விபத்து குறித்து ரயிலில் பயணம் செய்த ராம் சுதாகர் கூறுகையில், ‘நான், எஸ்.7 பெட்டியில் பயணம் செய்தேன். இன்று அதிகாலை 4.15 மணியளவில் எஸ்.11 பெட்டியில் திடீரென புகை வந்தது. உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தேன். என்னுடன் 17 பேர் இறங்கினர். பின்னர் 2 பேர் உடைமைகளை எடுக்க பெட்டிக்குள் சென்றனர். ஆனால், அவர்கள் திரும்ப வரவில்லை. தீயில் சிக்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்’ என்றார். தீயில் இறந்தவர்கள் கருகி கிடந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் நிவாரணம் ரயில்வே அறிவிப்பு
விபத்து பற்றி அறிந்து ரயில்வே அமைச்சர் முகுல்ராய் மற்றும் உயரதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தீயில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றார். தவிர தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பற்றியதற்கு காரணம் ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறா அல்லது நக்சல்கள் சதியா என்பது குறித்து உடனடியாக தெரிவிக்க இயலாது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று ரயில்வே மூத்த அதிகாரிகள் கூறினர்.
காயம் அடைந்த பயணிகள் விவரம்
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவனை மற்றும் அவர்களுடைய பெயர் விவரம்: நெல்லூர் ஜெயபாரதி மருத்துவமனை: சரளா, ரன்சர்லால், உதய பாஸ்கர், ஸ்ரீனிவாசலு, பிரகாஷ் சிங், சேபா சிங், பொல்லியன்ட் மருத்துவமனை: மதன்லால், ஹரிகிருஷ்ணன், அனுஷ்கா, திருபாத்தம்மன், சம்பத்குமார், பாலி கிளினிக்: விஜயகுமார் குருஷி. நெல்லூர் அரசு மருத்துவமனை: ரேகா, வீனா, சம்பா சிவராஜ், வர்மா சிரிஷ், வெங்கட கோட்டீஸ்வர ராவ், வர்மா, குகைன், ராகவன், சுனில்குமார், ஹர்ஷித், சந்தீப் அத்ரிகோத்ரி, அமீர் பிரீத்சிங்.
ஹெல்ப் லைன் எண்கள்
நெல்லூர் ரயில் விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்வதற்காக ரயில்வே ஹெல்ப்லைன் எண்களை அறிவித்துள்ளது. அதன் விவரம்:
சென்னை சென்ட்ரல்: 044-25357398, 25330821.
நெல்லூர்: 0861-2345863, 864, 865, 866, 0866-2576924, 2575034.
செகந்திராபாத்: 040-27786723, 27700868, 27786539.
வாரங்கல்: 0870-2426232, 097013 71063.
புதுடெல்லி: 011-23342954, 23341072, 23341074.
டெல்லி நிஜாமுதீன்: 011-24359748.
நெல்லூருக்கு சிறப்பு ரயில்
தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் தீப்பற்றிய எஸ்.11 பெட்டி கழற்றி விடப்பட்டு சென்னைக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 11.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என கூறப்பட்டது. மேலும், தீயில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை பார்க்க, அவர்களது உறவினர்களை இலவசமாக அழைத்து செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில், மருத்துவ குழுவினர், மருந்துகள், ஆடைகள், குடிநீர், உணவு போன்றவற்றுடன் காலை 10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சென்றது.