கூடங்குளம் வழக்கு : நெல்லை கலெக்டர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் தொடர்பாக வக்கீல் ராதாகிருஷ்ணன் உள்பட 10 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் சார்பில் அரசு சிறப்பு வக்கீல் இன்பதுரை ஆஜராகி, கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி தற்போது எந்த போராட்டமும் நடக்கவில்லை. அங்கு அமைதி நிலவுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
ரூ.500 கோடி செலவில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சாலைகள் அமைக்கவும், நலத்திட்ட பணிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இதை கேட்ட நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி ஆகியோர், இதுவரை நலத்திட்டங்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பதை நெல்லை கலெக்டர் வரும் 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.