பிரதமரை சந்திக்கிறார் ஆமிர்கான்
மும்பை: மனித கழிவுகளை அகற்றும் 3 லட்சம் தொழிலாளர்கள் குறித்து பேச பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கிறார் ஆமிர்கான். பாலிவுட் நடிகர் ஆமிர்கான், டிவியில் ‘சத்யமேவ ஜெயதே' என்ற ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறார். இதில் சமுதாய பிரச்னைகள் குறித்து விவாதித்து வருகிறார். மருத்துவர்களில் பெரும்பாலானோர் பணத்துக்கு ஆசைப்பட்டு நோயாளிகளிடம் பணம் பறிக்கும் போக்கு அதிகரித்து வருவது பற்றி இந்நிகழ்ச்சியில் சாடினார். இதற்கு மருத்துவ சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற குழுவினரை சந்தித்து பேசினார் ஆமிர்கான்.
இந்நிலையில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் அவல நிலை குறித்து இந்நிகழ்ச்சியில் விவாதித்தார். இதுவும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்களாக கருதப்படும் இத்தொழிலாளர்களின் பரிதாப நிலை பற்றி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் எடுத்துக்கூறி, இது தொடர்பாக அவரிடம் பேச முடிவு செய்தார் ஆமிர். நாளை அவர் பிரதமரை சந்திக்கிறார். அப்போது, தொழிலாளர்களை சந்தித்தபோது அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது குறித்தும் பிரதமரிடம் தெரிவிக்க உள்ளார்.