துணை ஜனாதிபதி தேர்தலில் மம்தா வேட்பாளருக்கு பாஜ ஆதரவு
கொல்கத்தா: துணை ஜனாதிபதி தேர்தலில் திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி அறிவிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க பாஜ தயாராக இருப்பதாக இமாச்சல பிரதேச பாஜ முதல்வர் துமல் தெரிவித்துள்ளார். துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீத் அன்சாரி துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் போல¢ இதிலும் கூட்டணி முடிவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியை சந்திக்க முடிவு செய்துள்ளது. இந்தக் கூட்டணி சார்பாக பாஜவின் ஜஸ்வந்த் சிங், நஜ்மா ஹெப்துல்லா, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் ஆகியோரில் ஒருவர் நிறுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் ஜஸ்வந்த்துக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் மம்தா அறிவிக்கும் வேட்பாளரை துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்க பா.ஜ. தயாராக இருப்பதாக இமாச்சல பிரதேச முதல்வர் பி.கே.துமல் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இமாச்சல் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கொல்கத்தா வந்த பி.கே.துமல் இதனை தெரிவித்தார். துணை ஜனாதிபதி தேர்தலில் கோபால கிருஷ்ண காந்தி மற்றும் கிருஷ்ண போஸ் ஆகியோரது பெயரை மம்தா பரிந்துரை செய்தார். இதில் கோபால கிருஷ்ண காந்தி துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்து விட்டார். கிருஷ்ண போஸ் எதுவும் தெரிவிக்கவில்லை. இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.