திருவள்ளூர் :திருவள்ளூர் அருகே ஏற்றுமதி கம்பெனியில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள மான் கொம்புகளை பதுக்கி வைத்திருந்த உரிமையாளர், மேலாளர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் ராஜாஜிபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (44), திருவள்ளூர்,பூந்தமல்லி நெடுஞ்சாலை அரண்வாயல் பகுதியில் ஏற்றுமதி நிறுவனம் வைத்துள்ளார். இங்கு, அரசு அனுமதியுடன் மான் கொம்புகளை வாங்கி பதப்படுத்தி, கோட் பட்டன் தயாரிக்க வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்நிலையில், மான் கொம்புகளை பதுக்கிவைத்து இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி ரூபேஷ்குமார் மீனாவுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர், டிஎஸ்பி பாலசந்திரன், செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் ஆகியோர் நேற்றிரவு நிறுவனத்துக்கு விரைந்தனர். அரசு அனுமதியின்றி, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 டன் மான் கொம்புகளை பதுக்கிவைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மேலும், மான் கொம்பு வாங்குவதற்கான உரிமம் கடந்த 2009ம் ஆண்டே காலாவதியாகிவிட்டதும் தெரிந்தது. ஆனால் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பித்துள்ள சான்றிதழ்களை உரிமையாளர் சுப்பிரமணியம் போலீசாரிடம் காண்பித்தார். மான் கொம்புகள் வாங்கியதற்கான ரசீதுகளையும் காண்பித்தார். ஆனால், உரிமம் புதுப்பிக்காமல் மான் கொம்பு வாங்கி வைத்திருந்தது குற்றம் என்று கூறி சுப்பிரமணி, மேலாளர் மணவாளநகரை சேர்ந்த கோதண்டராமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 2 கோடி ரூபாய் மதிப்புள்ள மான் கொம்புகளை பறிமுதல் செய்தனர். நிறுவனத்துக்கும் சீல் வைத்தனர்.