கிருஷ்ணகிரி :துப்பாக்கியால் சுட்டும் தலை துண்டித்தும் கொல்லப்பட்ட பெரியார் திராவிடர் கழக நிர்வாகி சடலத்துடன் உறவினர்கள், கட்சி தொண்டர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிருஷ்ணகிரி அருகே பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட் டம் உத்தனப்பள்ளி அருகே பாலேகுளம் பகுதியை சேர்ந்தவர் பழனி (எ) பழனிச்சாமி. பெரியார் திராவிடர் கழக கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளராக இருந்து வந்தார். நேற்று காலை வீட்டின் அருகே நிலத்தில் மகன் வாஞ்சிநாதனுடன் (28) சேர்ந்து தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கார் மற்றும் மூன்று பைக்குகளில் வந்த 22 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கியால் பழனிச்சாமியை சரமாரியாக சுட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அரிவாளாலும் வெட்டியது. அவரது தலையை தனியே துண்டித்து, 200 மீட்டர் தூரத்தில் வீசிவிட்டு கும்பல் தப்பி விட்டது. இதுகுறித்து பழனிச்சாமியின் மகன் வாஞ்சிநாதன், உத்தனப்பள்ளி போலீசில் புகார் கொடுத்த புகாரில், தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள்தான் தனது தந்தையை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து எம்எல்ஏ ராமச்சந்திரன், அவரது சகோதரர் வரதராஜ், தாய்மாமன் சாத்தப்பா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் உள்பட 22 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர். கொல்லப்பட்ட பழனிச்சாமியின் உடல் ஒசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க அவரது வீட்டருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று காலை போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூரில் பழனிச்சாமி உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், பழனிச்சாமியின் உறவினர்கள் மற்றும் பெரியார் திராவிட கழகத்தினர் இன்று காலை 9.30 மணியளவில் சடலம் இருந்த வேனுடன் திடீரென உத்தனபள்ளி , ராயக்கோட்டை சாலையில் உள்ள அலேசிபம் சந்திப்பு அருகே மறியலில் ஈடுபட்டனர். பெரியார் தி.க. மாவட்ட தலைவர்கள் கேசவன் (வடசென்னை), உமாபதி (தென்சென்னை), டேவிட் பெரியார் (காஞ்சிபுரம்), குமார் (கிருஷ்ணகிரி) ஆகியோர் தலைமையில் நடந்த மறியலில் ஏராளமானோர் பங்கேற்றனர். கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர். திடீர் மறியலால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சுகாசினி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி கூறினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதற்கிடையே, கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.