சென்னை :ஒருமுனை மற்றும் மும்முனை மின்சார மீட்டர் பற்றாக்குறை இம்மாத இறுதிக்குள் சரியாகி விடும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒரு முனை மின்சார மீட்டர் கையிருப்பு கடந்த ஜனவரியில் இருந்து குறைய தொடங்கியது. தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற்ற பிறகு மீட்டர்களை நுகர்வோரே வாங்கிக் கொள்ள அனுமதி அளித்து அந்த நிறுவனங்கள் பெயரும் இணையதளத்தில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி வெளியிடப்பட்டது. கேபிடல் நிறுவனம், 30 ஆயிரம் ஒருமுனை மின்மீட்டர் சோதனை செய்வதற்கான கடிதத்தை இன்று அளித்துள்ளது. மேலும், 70 ஆயிரம் மும்முனை மீட்டர்கள் அடுத்த மாதம் 12ம் தேதி சோதனை செய்யப்பட உள்ளன. 12 லட்சம் ஒருமுனை மீட்டர்களும் 1 லட்சத்து 18 ஆயிரத்து 850 மும்முனை மீட்டர்களும் கொள்முதல் செய்ய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இதுவரை நிலவிய மீட்டர்கள் பற்றாக்குறை இம்மாத இறுதியில் (ஜூலை) சீராகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.