சென்னை: கூட்டுறவு சங்க தனி அலுவலர்களின் பதவி காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ஒரு சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களுக்கு 2007-ம் ஆண்டு ஜூலை 7 மற்றும் 11-ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல்களின்போது நடந்த சில நிகழ்வுகள் அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டன. அந்த நிகழ்ச்சிகள் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தும் அடிப்படை நோக்கத்தை தகர்ப்பதாக இருந்தது. எனவே, அந்த தேர்தல்களை ரத்து செய்துவிட்டு, அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் புதிய தேர்தல்களை நடத்த உத்தரவிட்டது.
அதன்படி, வரும் 24-ம் தேதியோ அதற்கு முன்போ தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட தேதிக்குள் தேர்தல் நடத்த இயலவில்லை. எனவே, மே 25-ம் தேதிக்கு பிறகு 6 மாதங்களை கொண்ட கால அளவுக்கு கூட்டுறவு சங்கங்களின் தனி அலுவலர்கள் பதவிக்காலம் நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் சிவபதி தாக்கல் செய்த மசோதாவில், ‘தொன்மையான நினைவிடங்களை பாதுகாப்பதற்காக பாரம்பரிய கட்டிடங்களை அடையாளம் காண்பது, அதன் பொறியியல் செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு சட்டமுறையான அதிகார அமைப்பு ஒன்று அமைக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.