சேலம்: சேலம் குகை மாரியம்மன் கோயில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நேற்று விமரிசையாக நடந்தது. சாமி போல வேடமணிந்த கலைஞர்கள், அலங்கார ரதங்களில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினர். சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடிப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோயிலில் நேற்று இரவு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் வாகனங்களில் சாமி போல வேடமணிந்த கலைஞர்கள் வலம் வருவதுதான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட். வழக்கம்போல, இந்த ஆண்டும் விழா களை கட்டியது.
வண்டி வேடிக்கை விழாவை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு திரண்டனர். அலங்கார ரதங்கள் ஊர்வலம் இரவு 8 மணி அளவில் தொடங்கியது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கண்ணை கவரும் வண்ண ரதங்கள், கோயிலின் மாடவீதிகளை சுற்றி வலம் வந்தன.
கர்ணனுக்கு காட்சி தரும் சூரிய பகவான், அபிமன்யு - வத்சலாதேவி திருக்கல்யாணம், அர்ச்சுனன் - சுபத்திரை திருமணத்துக்கு வந்த கண்ணன், மகிஷாசுரன், மகிஷாசுரமர்த்தினி, சிவன், பிரம்மா என பல்வேறு சாமிகளை போன்று தத்ரூபமாக மேக்கப் அணிந்த கலைஞர்கள் ரதங்களில் வலம் வந்தனர். வழிநெடுகிலும் சிலர் குழந்தைகளை அவர்களிடம் கொடுத்து ஆசி பெற்றனர்.